1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (15:07 IST)

மீண்டும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்: பேருந்து கட்டண உயர்வு எதிரொலி!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தது. சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களை இந்த கட்டண உயர்வு மிகவும் பாதித்துள்ளது.
 
10 ரூபாய் கட்டணம் செலுத்து வந்த பயணிகள் தற்போது 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்டண உயர்வு என்றால் ஏதோ 2 அல்லது 3 ரூபாய் உயர்த்தலாம். ஆனால் இப்படி இரண்டு மடங்குக்கும் அதிகமாக பஸ் கட்டணங்களை உயர்த்தினார் ஏழைகள் எப்படி பயணம் செய்ய முடியும்.
 
அரசின் இந்த பஸ் கட்டண உயர்வு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் பேசியும், அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர். ஆனால் அரசு எந்த குரலுக்கும் செவிசாய்க்காமல் உள்ளது. இதனையடுத்து சென்னை, கோவை, விழுப்புரம், சேலம், தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
ஏற்கனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து தமிழகம் முழுவதும் அந்த போராட்டம் காட்டுத்தீபோல பரவி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இறுதியில் அரசு மாணவர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து அவசர சட்டத்தை இயற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
 
இந்நிலையில் மீண்டும் பஸ் கட்டண உயர்வுக்கு மாணவர்கள் குரல் கொடுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
நாங்கள் போராட்டம் செய்ய வேண்டும் என்று நினைத்துப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எங்களைப் போராட்டத்திற்கு நீங்கள் தள்ளுகிறீர்கள். இந்தப் பேருந்துக் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெறாவிட்டால் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போலத் தமிழகம் இந்தப் போராட்டத்தையும் காணும் என மாணவர்கள் தெரிவித்தனர்.