வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:54 IST)

சேர்த்து வைத்த பணத்தை கொடுத்த சிறுவன்: மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்

கொரோனா நிவாரண நிதியாக தனது சேமிப்பை முதல்வர் நிதிக்கு அனுப்பிய சிறுவனை பாராட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ளதால் மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் மருத்துவ பொருட்கள் வாங்கவும் ஏராளமான நிதி தேவைப்படுவதால் மக்கள் மனமுவந்து முதல்வர் நிவாரண நிதியில் பணம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த விஷாக் என்ற நான்காம் வகுப்பு மாணவன் தான் சேமித்து வைத்திருந்த ரூ.1150 ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.இதுகுறித்து அந்த சிறுவன் முதல்வருக்கு எழுதிய கடிதத்தை சிறுவனின் அப்பா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ” கொரோனா நிவாரணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த தொகையை தங்கள் மகன் நிதியுதவியாக அளித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது. இச்சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கமும் நாட்டிற்கு உதவும் உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்” என்று கூறியுள்ளார்.