வங்க கடலில் புயல் ; தமிழகம் உட்பட 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 15ம் தேதியன்று வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின் கடந்த அக்.18ம் தேதி அது புயலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
அப்படி புயலாக மாறினால், அது ஒடிசா அல்லது ஆந்திராவின் விசாகப்படினத்தை தாக்கும் எனவும், புயலாக மாறவிடில், 18ம் தேதிக்கு பின் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்நிலையில், நேற்று அந்த புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. மேலும், இன்று அதிகாலை அது தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால், சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.