கொரோனாவுக்கு மேலும் ஒரு திமுக பிரமுகர் பலி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுகவின் தணிக்கைக் குழு உறுப்பினரான பலராமன் பலியாகியுள்ளார்.
திமுக முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளரான பலராமன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பலியானார். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அஞ்சலி குறிப்பில் திமுக சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் பலராமன் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. அவர் கழகத்தின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ - அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வரும் அவர், போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்தில் நிற்கும் தைரியசாலி.
கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றி ஒரு இயக்கத்தின் தலைவரும், பொதுச்செயலாளரும் தேர்தலில் வெற்றி பெறப் பணியாற்றும் பெருமையைப் பெற்ற கழக முன்னணி நிர்வாகியாக விளங்கியவர். கலைஞர் மீது மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டிய அவரை - ஏன், ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தோடும்- கழகக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக் கூடியவரை இன்றைக்கு கழகம் இழந்து நிற்கிறது. அவர் மறைந்தாலும்- அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது. எல்.பலராமனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.