1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:09 IST)

தத்தளிக்கும் இலங்கை அரசு.. அகதிகளாக வெளியேறும் சூழலில் மக்கள்?

srilanka
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்து வரும் நிலையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அதிகதிகளாக வெளியேறும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக இலங்கையின் அன்னிய செலவாணி நிதி பற்றாக்குறை அதிகரிக்க தொடங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி கடும் சரிவை சந்தித்தது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரித்ததுடன் பின்னாட்களில் தட்டுப்பாடும் உண்டானது. இதன் விளைவாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கே தட்டுப்பாடு எழுந்துள்ளது. இது மக்கள் போராட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

இலங்கையில் இவ்வாறாக அரசியல் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டு வரும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் நலன் குறித்த ஆலோசனையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தபோது முன்வைத்த முக்கியமான கோரிக்கைகளில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் மூலமாக தமிழக அரசு வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதாகும்.

இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டு தமிழ் மக்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே நல்லுறவு உள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க முயற்சிப்பது குறித்து தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். அதேசமயம் இந்த பொருளாதார நெருக்கடி இலங்கை தமிழ் மக்களை தமிழகம் நோக்கி அகதிகளாக செல்லும் நிலைக்கு தள்ளலாம் என்ற சூழலும் உள்ளது.

சமீபத்தில் பொருளாதார நெருக்கடியால் குழந்தையுடன் இலங்கை தமிழ் தம்பதியர் இருவர் படகில் தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடி நோக்கி வந்தனர். அவர்களை எல்லையிலேயே தீவு திட்டில் படகு விட்டு சென்ற நிலையில் 8 மணி நேரமாக திட்டில் இருந்த அவர்கள் மீட்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முந்தைய இலங்கை போர் சூழலில் தப்பி தமிழகம் வந்த அகதிகளுக்காக தமிழ்நாடு அரசு குடியிருப்புகளை அமைத்து தந்து, வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் பலர் அகதிகளாக தமிழகம் நோக்கி வரலாம் என்று கணிக்கப்படுகிறது. இதுவரை அகதிகளாக அதிகம் பேர் அடைக்கலம் தேடி தமிழகம் விரையவில்லை என்றாலும், ஒருவேளை அதிகமானோர் வந்தால் அடைக்கலம் தர இந்திய அரசு சம்மதிக்குமா என்ற கேள்வியும் உள்ளது.

இந்திய அரசோ, தமிழக அரசோ தற்சமயம் தங்களாலான உதவிகளை தூதரகங்கள் மூலம் இலங்கையிலேயே ஏற்படுத்தி தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளது. நேரடியாக அகதிகளை ஏற்பது குறித்த எந்த கோரிக்கையோ, விவாதமோ அரசு தரப்பில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. ஆனால் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதிலும், மக்களின் வாழ்வாதார உதவிகளிலும் இந்திய அரசின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.