வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (10:08 IST)

ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை.. இப்போ எடுக்க போற நடவடிக்கை ஒரு பாடமா இருக்கும்! - அமைச்சர் அன்பில் மகேஸ்!

சென்னை அரசுப் பள்ளியில் சுயமுன்னேற்ற சொற்பொழிவு என்ற பெயரில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சைக்குள்ளான நிலையில் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

 

 

சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் சுயமுன்னேற்ற சொற்பொழிவு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மகாவிஷ்ணு என்பவர் கலந்து கொண்டு மாணவிகளிடையே பேசினார். அப்போது அவர் மாற்று திறனாளிகள், ஏழைகளாக இருப்பவர்கள் முன் ஜென்ம பாவத்தின் காரணமாக அப்படி இருப்பதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அவரது பேச்சால் கோபமான பார்வை மாற்றுதிறனாளி ஆசிரியர் ஒருவர், மகாவிஷ்ணுவை தட்டிக் கேட்டபோது அதற்கு அவர் ஆசிரியரிடம் மோசமாக நடந்து கொண்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
 

 

இந்நிலையில் இந்த சொற்பொழிவு ஏற்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இட்ட பதிவில், மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனையும், அறநெறியுமே முக்கியம் என்று கூறியுள்ளார்.

 

இந்த சர்ச்சை குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் “இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதல் அமைச்சருக்கும், பள்ளிக்கல்வி துறைக்கும் உள்ளது. அரசுப்பள்ளியில் சொற்பொழிவு என்ற பெயரில் கல்விக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய விவகாரத்தில் நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை, இனி தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K