பழநி கோவில் கும்பாபிஷேகம், தைப்பூசம்! சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பழநி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவிற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள பழநி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 13 ஆண்டுகள் கழித்து நடக்கும் கும்பாபிஷேகம் என்பதால் பலரும் பழநியில் தரிசனத்திற்காக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து அடுத்த வாரம் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவும் முருகன் கோவில்களில் சிறப்பான ஒன்று ஆகும்.
அதனால் தைப்பூச திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்திற்கு அதிகமான பக்தர்கள் வருவதையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் மதுரையிலிருந்து பழநி வரை முன்பதிவில்லா சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும். அதுபோல தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 3,4,5 ஆகிய தேதிகளிலும் மதுரை – பழநி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழநியை சென்றடயும். மீண்டும் அங்கிருந்து 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சோழவ்ந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.
Edit By Prasanth.K