1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (18:25 IST)

தமிழக கடலில் ஆள் இல்லாமல் மிதக்கும் படகுகள்!?? – பயங்கரவாதிகள் ஊடுருவலா?

இந்திய கடல் பகுதிகளில் ஆள் இல்லாத படகுகள் மிதப்பதாகவும் இதன் மூலம் பயங்கரவாதிகள் இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவி இருக்கலாம் எனவும் இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து படையினர் ஆள் இல்லாமல் மிதந்து கொண்டிருந்த படகை கண்டு பிடித்துள்ளனர். அந்த படகில் மீன்பிடி பொருட்கள் ஏதும் இல்லாததால் அதில் பயணித்தவர்கள் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதில் பயணித்தது யார்? அவர்கள் எங்கே போனார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இதே போல ஆளில்லாத படகுகள் குஜராத் கடல் பகுதியிலும், சர் க்ரீக் தீவு பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. முக்கியமாக தென்னிந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்த அவை திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சில வாரங்கள் முன்பு தமிழகத்தின் கோயம்புத்தூர் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகப்புகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் மீண்டும் தமிழ்நாட்டு கரையோர பகுதிகளில் படகு கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தியா ராணுவ லெப்டினெண்ட் ஜெனரல் எஸ்.கே.சைனி “தென்னிந்திய பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. அதனால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என கூறியுள்ளார்.