வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (15:00 IST)

அக்டோபர் 25 பகுதி சூரிய கிரகணம் - வானில் ஒரு தீபாவளி !

வரும் அக்டோபர் 25 மாலையில் சூரியன் அந்தி சாயும் நேரத்தில் பகுதி சூரிய கிரகணம் ஏற்படும்.


இந்தியாவின் எல்லா பகுதியிலும் இந்த பகுதி சூரிய கிரகணம் தென்படும். தீபாவளியை ஒட்டி நிகழும் இந்த கிரகணம் வானத்தில் ஒரு தீபாவளியாக விளங்கும்.

கிரகணம் என்றால் என்ன?

பூமி ,நிலவு ,சூரியன் ஆகியவை நேர்கோட்டில் வரும்போது, பூமியின் சில இடங்களில் நிலவு சூரியனை மறைக்கும். அதுவே சூரிய கிரகணம் அதாவது சூரிய மறைப்பு. மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்றே தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம்.

எங்கே எல்லாம் தெரியும் ?

அக்டோபர் 25  ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, யூரல்ஸ், மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, தெற்காசியா வடகிழக்கு  ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் எல்லா இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிரகணம் மேற்கு அடிவானில் புலப்படும். 

பகுதி சூரிய கிரகணம் என்பதால் முழுமையாக சூரியன் மறைந்துவிடாது. எடுத்துக்காட்டாக வெறும் 9.7% சூரிய முகம் மட்டுமே சென்னையிலிருந்து காணும்போது அதிகபட்சமாக மறையும். மேற்கு அடிவானத்தை தெளிவாக காணக்கூடிய பகுதியில் நின்று நோக்கினால் மாலை 5  மணிக்கு கிரகணம் துவங்குவதை காணலாம். ஒரு ஆப்பிள் கடித்ததை போல சூரியனின் முகத்தில் ஒரு பகுதியில் சற்றே நிழல் காணப்படும்.

கிரகணம் முடிவதற்குள் சூரியன் மறைந்துவிடும் என்பதால் சில நிமிடங்கள் மட்டுமே தமிழகத்தில் காண முடியும்.

ஏன் பூமியில்  சில இடங்களில் மட்டும் கிரகணம் தென்படுகிறது ?

சூரிய ஒளியை - குடை, மரம், கட்டிடம்  மறைக்கும்போது நிழல் ஏற்படுத்துகிறது. அந்த நிழலில் நாம் நிற்கும்போது சூரியன் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் நிழலுக்கு வெளியே வெயிலில்  நிற்பவர்களுக்கு சூரியன் தென்படும்.  அதுபோல நிலவு ஏற்படுத்தும் நிழல் படரும் பூமி பகுதியில் கிரகணம் புலப்படும். மற்ற இடங்களில் எப்போதும்போல சூரியன் பிரகாசிக்கும்.

கர்பிணி பெண்களுக்கு ஆபத்தா?

கிரகணச் சமயத்தில் சூரியனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை. எப்போதும் போல நாற்புறமும் தன் ஒளியை வீசிக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த சிறப்பு மர்மக்கதிர்களும் வெளிப்படுவது இல்லை. கிரகணத்தின் போது உணவு உண்ணக்கூடாது என்று கூறுவது தவறானது. கிரகணத்தின் போது எந்தவித சிறப்பு கதிர்களும் பூமியில் வருவதில்லை. கிரகணத்தின் போது உண்பதால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. கிரகணத்தின் போது பறவைகள் உணவு உண்கின்றன. ஆடு, மாடுகள் புல்லை மேய்கின்றன அவைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படுவதில்லை. எனவே வதந்திகளை நம்பாமல் தாராளமாக உணவை உட்கொண்டு மகிழுங்கள்.

பூமி இருக்கும் திசையில் இடையில் நிலவு வந்து மறைத்து விடுவதால் பூமியில் சில பகுதிகளில் சூரிய முகம் மறைக்கப்படுகிறது. அந்த பகுதியில் மட்டும் கிரகணம் தென்படும். உலகில் வேறெங்கும் கிரகணத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிந்துக்கொள்வதில்லை. அங்கெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அதன் போக்கில் கிரகணத்தின் போது வெளியே திரிந்துகொண்டு தான் உள்ளன. அவற்றுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை. சூரிய, சந்திர கிரகணம் என்பது அற்புதமான வானக்காட்சி. இயற்கையின் இந்த விளையாட்டைப் பாதுகாப்பாக கண்டு களிக்க வேண்டும். வெறும் நிழலைக் கண்டு அச்சப்படுவது அறிவியலுக்கு முரணானது.