செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (08:38 IST)

இரவோடு இரவாக சிறையில் தள்ளப்பட்ட முகிலன்: ஏன் இந்த அவசரம்?

கரூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் இரவோடு இரவாக அடைக்கப்பட்டுள்ளார். 
 
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனே அங்கிருந்து சென்னை அழைத்துவரப்பட்ட அவரை சிபிசிஐடி போலீஸார் கஸ்டடியில் எடுத்தனர். 
 
இதனிடையே கரூரை சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் மீது பாலியல் புகார் அளிக்க முகிலன் கைது செய்யப்பட்டார். முகிலனின் உடல்நலம் சரியாக இல்லாத காரணத்தால் அவர் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 
 
இதனைதொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலனை மேஜிஸ்திரேட் இன்று காலை 10 மணி அளவில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தவிட்டார். 
இன்று காலை வரை ஆஜர்படுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், முகிலனை இரவோடு இரவாக கரூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜூலை 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
 
முகிலன் மருத்துவ சிகிச்சை கோரிய போதும் அதை ஏற்க மறுத்து, திருச்சி சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார் என கூறி அவசர அவசரமாக சிறையில் அடைக்கப்பட்டதற்கான பின்னணி என்ன என்பது புரியாத கேள்வியாக உள்ளது.