1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 ஜூன் 2025 (15:47 IST)

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!
திருநெல்வேலி அருகே, 'படி, படி' என்று வற்புறுத்திய தந்தையை, கல்லூரி மாணவன் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டம் மேல கருங்குளம் அசோகாபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் - சகுந்தலா தம்பதிக்கு, தங்கப்பாண்டி என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மாரியப்பன் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வரும் நிலையில், அவரது மகன் தங்கப்பாண்டி இளங்கலை வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தங்கப்பாண்டி சரியாக படிக்கவில்லை என்று மாரியப்பன் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.
 
இந்த நிலையில், நேற்று படிப்பு குறித்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தந்தை படி படி என திட்டியதால் தங்கப்பாண்டி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது, தங்கப்பாண்டி ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வந்து, தந்தை மாரியப்பனின் தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
 
மாரியப்பனின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சம்பவம் நடந்த பிறகு, வெளியூர் தப்பி செல்வதற்காக நெல்லை பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த தங்கப்பாண்டியை போலீசார் மடக்கி பிடித்துக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran