பின்புற வாசல் வழியாக விற்பனை...கடைகளுக்கு 1 லட்சம் அபராதம்
கரூரில் அரசின் உத்தரவையும் மீறி பின்புற வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனையில் ஈடுபட்ட 2 கடைகளுக்கு 1 லட்சம் அபராதம் விதித்த நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள்.
கரூர் நகரில் ஜவஹர் பஜார் பகுதியில் பிரபல துணி கடைகளில் பின்பக்க வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனை நடைபெறுவதாக நகராட்சி நல அதிகாரி (பொ) அதிகாரி பழனிச்சாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நகர் நல அலுவலர் (பொ) பழனிச்சாமி மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஜவஹர் பஜார் பகுதியில் முன்பக்க கதவுகளை பூட்டியிருந்த கடைகளின் பின்பக்க கதவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நியூ கே.பி.எம் மற்றும் கே.பி.எம் வேலன் சில்க்ஸ் துணிகடைகளின் பின்புற கதவு வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த நகர்நல அதிகாரிகள் வாடிக்கையாளர்களையும், விற்பனையாளர்களையும் வெளியேற்றி நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டினர். மேலும், இரண்டு கடைகளுக்கும் தலா 50 ஆயிரம் அபராதம் வித்தித்தனர். கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் இது போன்று விற்பனையில் ஈடுபடும் கடைகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். மேலும், இதே போன்று நேற்று மட்டும் சுமார் 15 கடைகளுக்கு சீல் வைத்த்து குறிப்பிடத்தக்கது. கரூர் நகராட்சி நகர்நல அதிகாரி பழனிச்சாமி, தெரிவிக்கையில், கொரோனா இரண்டாம் அலை ஆங்காங்கே கோர தாண்டவம் ஆடும் நிலையில், பொதுமக்களுடன் இணைந்து கடை உரிமையாளர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவிலிருந்து மக்கள் தப்பிக்க முடியும் ஆகவே விழிப்புணர்வு இன்னும் தேவை என்றார்.