வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 29 மே 2024 (12:50 IST)

ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன்.! 31-ம் தேதி ஆஜராக உத்தரவு..!

Nayanar Nagandran
தாம்பரத்தில் ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட நான்கு பேர் வரும் 31-ம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 
 
கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த திருநெல்வேலி விரைவு  ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் பயணித்த மூன்று பேரிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் இருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்தை பறக்கும்படையினர் கைப்பற்றினர்.
 
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாஜகவின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட இருந்ததாக புகார் எழுந்தது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் ஓட்டுநர் பெருமாள், மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
 
மேலும் பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழ்நாடு பாஜக வர்த்தகப் பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் வசிக்கும் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் அவரது வீட்டில் வைத்து கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் வரும் 31-ம் தேதி சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.