வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (12:04 IST)

விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்.. ஆனாலும் பிறந்தநாளுக்கு வாழ்த்திய விஜய்! - கூட்டணிக்கு குறியா?

Vijay Vs Seeman

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

 

தமிழக அரசியலில் நுழைந்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வெற்றிகரமாக தனது முதல் மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்று சொன்னபோது பல கட்சியினரும் மறைமுகமாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் வந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகையை நேரடியாக ஆதரித்தவர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

 

ஆரம்பத்தில் சீமான், நடிகர் விஜய்யை ஆதரித்து பேசி வந்த நிலையில், கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது, விஜய்யின் அரசியல் கொள்கைகள் தெரிந்த பிறகுதான் கூட்டணி பற்றி சிந்திக்க முடியும் என கூறியிருந்தார். இந்நிலையில் தனது முதல் கட்சி மாநாட்டில் பேசிய விஜய், திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என பேசியிருந்தார். மேலும் மறைமுகமாக சில கட்சிகளை விமர்சித்து விஜய் பேசியிருந்த நிலையில், அதில் சீமானைதான் குறிப்பிடுகிறார் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது.

 

ஆனால் திராவிடம் மீதான அதிருப்தி கருத்துகள் கொண்டிருந்த சீமான், விஜய்யின் அரசியல் கொள்கைகளுடன் தாங்கள் ஒத்துப்போகவில்லை என்று வெளிபடையாகவே சொல்லிவிட்டார். அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீமான், நடிகர் விஜய்யையும், அவரது அரசியல் கட்சியையும் நேரடியாகவே தாக்கி பேச, உடனே நாதக - தவெக தொண்டர்கள் இடையே சமூக வலைதளங்களில் பெரும் வாக்குவாதமே உண்டானது.
 

 

இதனால் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்று பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில்தான் இன்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தாளுக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

 

சீமான் எப்படி விஜய்யை ‘தம்பி’ என்று அழைக்கிறாரோ, அதற்கேற்றார்போல விஜய்யும் சீமானை ‘சகோதரர்’ எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். இதனால் இந்த தொடக்க கால கசப்புகள் மறைந்து எதிர்காலத்தில் அவர்கள் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K