ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால் கட்சியில் இருந்து வெளியேறலாம்: சீமான் அறிவிப்பு..!
ஈவேராவை எந்த காலத்திலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், அப்படி ஈவேரா தான் வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியில் இருந்து தாராளமாக வெளியேறிக்கொள்ளலாம் என்றும் அவர் கட்சியினருக்கு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் ஓட்டுகள் கிடைத்ததை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார். "நாங்கள் வாங்கிய ஓட்டுக்கள் அனைத்தும் எங்கள் கட்சிக்காக மக்கள் அளித்த ஓட்டுகள். ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் பெற்ற ஓட்டு," என்று தெரிவித்தார்.
"எவ்வளவோ பெரியவர்கள் இருக்கும்போது நான் ஏன் ஈவேராவை ஏற்க வேண்டும்? ஈவேரா குறித்து கொஞ்சம் ஓவராக பேசிய விட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். இப்போதுதான் தொடங்கி உள்ளேன், இனிமேல் தான் போகப்போக இன்னும் அதிகமாக பேசுவேன். என் வேகம் எவ்வளவு என்பது இனிமேல் தான் அவருக்கு தெரியும்," என்று தெரிவித்தார்.
"தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, முட்டாள்களின் மொழி. அந்த சனியனை விட்டுவிட்டு ஒழி என்று சொன்ன அந்த சனியனை எதிர்ப்பது தான் என் வேலை. ஈவேரா தான் வேண்டும் என்பவர்கள் தாராளமாக என்னுடைய கட்சியில் இருந்து வெளியேறிக்கொள்ளலாம்," என்றும் அவர் கூறினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran