வெள்ளி, 2 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified சனி, 1 அக்டோபர் 2022 (14:47 IST)

சவுக்கு சங்கருக்கு ஏன் இப்படி? சீமான் கண்டனம்!

அரசியல் பழிவாங்கும் போக்கோடு சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதியை மறுப்பதா? என சீமான் கண்டனம்.  


இது குறித்து அவர் கூறியதாவது, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பி சவுக்கு சங்கர் அவர்களது பார்வையாளர் சந்திப்புக்கு ஒருமாத காலம் அனுமதி மறுத்திருக்கும் திமுக அரசின் செயல் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

மிகக்கொடியக் குற்றங்களில் ஈடுபட்டு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளுக்குமான அடிப்படை உரிமையாகச் சட்டமும், சனநாயக அமைப்பு முறைகளும் வழங்கியிருக்கிற பார்வையாளர் சந்திப்புக்குத் தடைவிதிப்பதென்பது ஏற்கவே முடியாத கொடுங்கோன்மையாகும்.

அதிகப்பார்வையாளர்கள் வருகிறார்கள் என்பதைக் காரணமாகக் காட்டி, அவருக்கானப் பார்வையாளர் சந்திப்பையே முற்றாக ரத்துசெய்வது எந்தவகையில் நியாயமாகும்? பார்வையாளர்களுக்கான அனுமதியை முறைப்படுத்தி, சிறைத்துறை விதிகளின்படி சந்திப்புக்கு வழியேற்படுத்த வேண்டுமே ஒழிய, மொத்தமாகச் சந்திப்புக்கே அனுமதியில்லை என அறிவிப்பது மிக மோசமான நிர்வாகச்செயல்பாடாகும்.

கருத்துச்சுதந்திரம், தனிமனித உரிமை, சனநாயக மாண்பு, சமூகநீதி எனப் பேசும் திமுக அரசு, தனது ஆட்சியின் ஊழல்களையும், முறைகேடுகளையும் விமர்சித்தாரென்பதற்காகவே சவுக்கு சங்கரைப் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, தம்பி சவுக்கு சங்கர் அவர்களது பார்வையாளர் சந்திப்புக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஒரு மாத காலத்தடையை நீக்கி, பார்வையாளர் சந்திப்புக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

 Edited By: Sugapriya Prakash