சத்துணவில் மாணவர்களுக்கு மட்டன் பிரியாணி: நெகிழ வைத்த பணியாளர்!
புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பணியாளர் பிரியாணி உணவளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் பாரிசா பேகம் என்ற பெண் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். தினமும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி வரும் பாரிசா பேகத்திற்கு ஒரு நாளாவது அனைவருக்கும் பிரியாணி வழங்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.
அதை நிறைவேற்றும் விதமாக தனது சொந்த செலவில் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் சுவையான மட்டன் பிரியாணி செய்து விருந்தளித்துள்ளார். தினசரி பாரிசா கையால் சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் அவர் வழங்கிய பிரியாணியையும் மிகவும் சுவைத்து சாப்பிட்டுள்ளனர்.
பாரிசா பேகம் பிரியாணி விருந்து அளித்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை அளித்ததோடு, பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.