ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:29 IST)

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது! - மகாராஷ்டிராவில் மற்றுமொரு அதிர்ச்சி!

மகாராஷ்டிராவில் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மகாராஷ்டிராவின் பத்லாபூர் பகுதியில் பள்ளிக்கு சென்ற நர்சரி வகுப்பு சிறுமிகள் இருவரை துப்புரவு தொழிலாளி கழிவறையில் வைத்து வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேற்று முதலாக பத்லாபூரின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்காத காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார். 

 

இந்த அதிர்ச்சி மறைவதற்கு மகாராஷ்டிராவின் மற்றொரு பள்ளியில் ஆசிரியரால் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் தெரிய வந்துள்ளது. அகோலா மாவட்டத்தில் காசிகேதா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் ப்ரமோத் சர்தார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படங்களை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 

 

இது சில மாதமாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் சில மாணவிகள் இதுகுறித்து குழந்தைகள் உதவி மைய எண்ணில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக பள்ளிக்கு சென்ற குழந்தைகள் நல வாரிய உறுப்பினர்கள், அவரது வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவிகளையும் தனித்தனியாக அழைத்து விசாரித்துள்ளனர். அதில் ஆசிரியர் சர்தார், மாணவிகளிடம் ஆபாச படங்களை காட்டுவதும், உடலில் ஆங்காங்கே தொடுவதுமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. 

 

இதுகுறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ப்ரமோத் சர்தார் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளிலேயே பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் தொடர் சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K