வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (13:28 IST)

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா? – சத்யப்ரதா சாகு விளக்கம்!

வேளச்சேரியில் விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதால் மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக முடிவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்குப்பெட்டிகள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எந்திரம் உள்ள கூடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளச்சேரியில் இருவர் வாக்கு எந்திரங்களை பைக்கில் கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை மக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர்கள் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் என தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்திருந்த நிலையில் வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள சத்யப்ரதா சாகு “வேளச்சேரியில் விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது தேர்தல் விதிமுறை மீறலே. ஆனால் வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடத்துவதா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்” என கூறியுள்ளார்.