1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (17:28 IST)

வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: சொன்னவர் யார் தெரியுமா?

தமிழக முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவர் பதவிக்கான வெற்றிடம் காலியாக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்தார். இதே கருத்தை சமீபத்திலும் அவர் தெரிவித்த போது அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன
 
தமிழகத்தில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை முக ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என திமுகவினரும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிரப்பி விட்டார் என அதிமுகவினர் கூறிவந்தனர். இருப்பினும் டிடிவி தினகரன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமிழகத்தின் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ராவ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஒசூரில் இன்று நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 70 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்த சத்யநாராயணா பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தமிழக மக்கள் ரஜினிகாந்துக்கு கண்டிப்பாக ஆதரவு அளிப்பார்கள் என்றும் ரஜினியும், கமலும் தேவையான நேரத்தில் இணைவார்கள் என்றும், அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.