"சசிகலாவின் கதை முடியப்போகிறது" - கொந்தளிக்கும் அதிமுக முன்னாள் சபாநாயகர்
சசிகலாவின் கதை இன்னும் இரண்டு நாட்களில் முடியப்போகிறது என்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.
சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சராமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அரசியல் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில், பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் முறையிட்டனர்.
இதற்கிடையில், சசிகலாவுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்த பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர் வீட்டுக்கு, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வந்தார். அவரை முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் வரவேற்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “அதிமுக அவைதலைவர் மதுசூதனன் தர்ம யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த போராட்டத்தில் நம்மோடு இணைந்துள்ளார். அதிமுகவில், அங்கே வேறு யாரும் கிடையாது. அதிமுகவின் முக்கிய பதவிகளான பொருளாளர் நம்முடன் உள்ளார், அவை தலைவரும் இப்போது நம்முடன் இருக்கிறார்.
கட்சியின் பொருளும், கருவூலமும் இங்கேதான் இருக்கிறது. பொருளாளர் தர்ம யுத்தத்தை தொடங்கி, தற்போதைய தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலாவை நீக்கவும், அவர் முதல்வராவதை தடுக்கவும் மாபெரும் மக்கள் புரட்சியை தொடங்கியுள்ளார்.
முதல்வர் ஓபிஎஸ் தொடங்கியுள்ள இந்த தர்ம யுத்த நிகழ்வுகள் இனி வேகமாக இருக்கும். இரண்டு நாட்களில் எதிரணியினர், சசிகலாவின் கதை முடியப்போகிறது” என்று கூறியுள்ளார்.