செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (16:35 IST)

வங்கிகள் கடன்களை வசூலிக்க அழுத்தம் கொடுக்கக் கூடாது… சரத்குமார் கோரிக்கை!

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கொரோனா காலத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கடன்களை வசூலிக்க அழுத்தம் கொடுக்கக் கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது சம்மந்தமாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-

கொரோனாவால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அமல்படுத்தியிருக்கக்கூடிய ஊரடங்கை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றால், பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவும், தொழில் இல்லாமல், வணிகம் இல்லாமல், வியாபாரம் இல்லாமல் மக்கள் வேதனையில் உழன்று வாடும் உணர்வை புரிந்திருப்பார்கள். வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானமில்லாமல் மக்களின் வாழ்வாதாரம் வீட்டுக்கடன், தனிக்கடன், வாகனக்கடன், நகைக்கடன் என பல விதமான கடனில் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள்.

 பொருளாதாரத்தை முன்னேற்ற நாளைய தினமே ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில்கள் துவங்கினாலும் நசிந்து போன தொழிலை ஒரே நாளில் மீட்டெடுப்பது சாத்தியமான விஷயமல்ல. அனைத்து சூழல்களையும், சிக்கல்களையும், சவால்களையும் கடந்து 100 சதவிகிதம் உழைப்பை கொடுத்து, லாபம் ஈட்டி வங்கிக்கு திருப்பி செலுத்துவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தேவைப்படும்.

நியாயமாக கடனை திரும்பச் செலுத்தக்கூடியவர்கள் கூட, தொழில் முடக்கம் காரணமாகவே கடனை திரும்ப செலுத்த முடியாமல் உள்ளனர். ஆனால், அவர்களுக்கும் அழுத்தம் தரும் வங்கிகளின் செயல்பாடு வருத்தமளிக்கிறது. சொத்துகளை முடக்குவோம், பத்திரிகையில் வெளியிடுவோம், பிரகடனப்படுத்துவோம் என வங்கிகளில் இருந்து பெரும்பாலான தொழிலதிபர்களுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்படும் போது, அவர்கள் மன உளைச்சலில் சிக்கித் தவிப்பதும், தவறான முடிவெடுக்க தூண்டுவதையும் மத்திய அரசு உணர வேண்டும்.

பொருளாதார ரீதியாக அரசு மக்களுக்கு உதவ வேண்டுமெனில், 6 மாதங்களுக்கு வங்கிகள் எவருக்கும் அழுத்தம் தராமல் சுதந்திரமாக தொழில் செய்ய வழிவகுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மருத்துவ நிபுணர்களின் கணிப்புப்படி 3ஆம் அலை வந்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், நிச்சயமாக மத்திய அரசு ஒரு வருடத்திற்கு வங்கிக்கடன்களை திரும்ப செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி யாருக்கும் எந்தவொரு வருமானமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் சூழலில், ஒரு தொழிலதிபர் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறார், 50% ஊதியம் வழங்குகிறார், 50% பணியாளர்களை வைத்து கொண்டு வேலை வாங்குகிறார், நிறுவனத்தை நடத்த முடியாமல் தவிக்கிறார். இது ஒரு நிறுவனத்தின் நிலை மட்டுமல்ல, லட்சக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், பணியாளர்கள், அவர்களது குடும்பங்களின் நிலையும் இது தான். எனவே, நிறுவனத்தின் சிரமங்களை குறைக்கவும், தனிநபர் பொருளாதார சிரமங்களை குறைக்கவும் மத்திய அரசு நிச்சயமாக இந்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு வங்கிக்கடன் தவணை திரும்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்.

மாண்புமிகு  முதலமைச்சர் அவர்கள், 12 மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுனர் கவனத்திற்கு எடுத்துச் சென்று இரண்டு காலாண்டு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்த கருத்தை வழிமொழிகிறோம். அதேசமயம், தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் அழுத்தம் கொடுத்து கால அவகாசம் பெற்றுத்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.