புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2019 (14:42 IST)

விஜயகாந்துடன் மற்றொரு கட்சி தலைவர் சந்திப்பு! திடீர் திருப்பமா?

தேமுதிக தலைவர் விஜயகாந்தை கூட்டணி நிமித்தம் காரணமாக அதிமுக, திமுக தலைவர்கள் கடந்த சில நாட்களாக சந்தித்து வந்தனர். அதிமுக கூட்டணியில் இருந்து கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களும் திமுக தரப்பில் இருந்து மு.க.ஸ்டாலினும் சமீபத்தில் சந்தித்தார்கள் என்பது தெரிந்ததே.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் உள்பட ஒருசில பிரமுகர்களும் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், விஜயகாந்தை அவருடை இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது விஜயகாந்த் உடல்நலம் குறித்து சரத்குமார் விசாரித்ததாகவும், வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,  விஜயகாந்திடம் தனிப்பட்ட முறையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசியதாகவும், தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக வரும் 6ம் தேதி அறிவிக்க உள்ளதாக விஜயகாந்த் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாடு வரும் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சரத்குமார் தெரிவித்தார். விஜயகாந்த்-சரத்குமார் சந்திப்பால் புதிய கூட்டணி ஏற்பட்டு திடீர் திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்