திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (14:32 IST)

பாஜகவில் சேரவில்லை; வாழ்த்து அட்டை என நினைத்தேன்! – சலூன் கடைக்காரர் விளக்கம்!

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் தான் பாஜகவில் சேரவில்லை என கூறியுள்ளார்.

நேற்று பிரதமர் மோடி அவர்கள் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது மதுரையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழில் செய்துவரும் சலூன் கடைக்காரர் தனது மகளின் படிப்புச் செலவிற்காக வைத்திருந்த ரூ.5 லட்ச ரூபாயை ஏழைகளுக்கு உதவி செய்தது குறித்து குறிப்பிட்டு அதற்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்

இதனையடுத்து நேற்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சலூன் கடைக்காரரை நேரில் சென்று சந்தித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று சலூன் கடைக்காரர் மோகன் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேசியுள்ள சலூன் கடைக்காரர் மோகன் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தனக்கு அளித்த உறுப்பினர் அட்டையை வாழ்த்து அட்டை என நினைத்து பெற்றதாகவும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

காலையில் பாஜகவில் மோகன் இணைந்தார் என கூறப்பட்டுள்ள நிலையில் அதற்குள் அவர் பாஜகவில் இணையவில்லை என மறுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.