1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (12:36 IST)

உங்க வீட்ல கொரோனா இருக்கா? சர்வே எடுப்பது போல் வந்த திருட்டு கும்பல்!

கொரோனா சர்வே எடுப்பது போல நடித்து வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனாவை பயன்படுத்தியே மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் லெனின். இவரது மனைவி செல்வி. லெனின் வீட்டில் இல்லாத சமயம் வீட்டிற்கு வந்த இருவர் தாங்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என்றும், கொரோனா குறித்து கணக்கெடுப்பு நடத்த வந்திருப்பதாக கூறிய அவர்கள் பேச்சு கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். செல்வி எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென கத்தியை காட்டி மிரட்ட தொடங்கியுள்ளனர், அதிர்ச்சி அடைந்த செல்வி அவர்களை தள்ளி விட்டு கத்திக்கொண்டே வெளியே ஓடியுள்ளார். உடனடியாக லாவகமாக செயல்பட்ட கொள்ளை கும்பல் வீட்டிற்குள் இருந்த அவரது மகளிடம் உள்ள நகைகளை பறித்துக் கொண்டு, வீட்டில் இருந்த பணத்தையும் அள்ளிக் கொண்டு பின்பக்கம் வழியாக தப்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து போலீஸார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்ணாசாலை 3வது தெருவை சேர்ந்த பாட்ஷா என்பவர் அவரது கூட்டாளிகளோடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து, பாட்ஷா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.