ரயில்வே துறை எச்சரிக்கையை மீறி இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. நெல்லையில் பரபரப்பு..!
ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், நெல்லையில் மீண்டும் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு மும்மொழி கல்வி கொள்கையை தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதாக திமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்த பெயர் பலகையின் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டதால், ரயில்வே போலீசார் இது குறித்து திமுக நிர்வாகிகள் ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று, மீண்டும் நெல்லை ரயில் நிலையம் சந்திப்பு அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் நிலையத்திற்குள் யாரும் உள்ளே செல்லாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் ஆர்ப்பாட்டம் முடிந்து, திமுகவினர் அங்கிருந்து புறப்பட்ட பிறகு, திடீரென நான்காவது மேடையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் உள்ள "திருநெல்வேலி சந்திப்பு" என்ற ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர்.
இதனால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். முன்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்பகுதி வழியாக வந்த சிலர் எழுத்துக்களை அழித்து சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
Edited by Mahendran