இங்க இருந்த டவரை காணோம்ங்க..! தனியார் நிறுவனத்துக்கே விபூதி! – திருடர்கள் கைது!
சேலத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவரை அக்கு வேறாக கழற்றி விற்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு தனியார் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அதற்கு செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்கள் முன்பாக பராமரிப்பு பணிகளுக்காக தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் செல்போன் டவரை ஆய்வு செய்ய வந்துள்ளனர். ஆனால் அங்கு டவர் இல்லாததை கண்டு அவர்கள் அதிச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சேலம் பராமரிப்பு மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செல்போன் டவர் செக்யூரிட்டியிடம் விசாரித்ததில் கடந்த சில மாதங்கள் முன்னதாக சில அதிகாரிகள் வந்து செல்போன் டவரை இடம் மாற்ற போவதாக ஆவணங்களை காட்டியதாகவும், ராட்சத எந்திரங்களை கொண்டு டவரை பிரித்ததாகவும் கூறியுள்ளார்.
அதிகாரிகள் போல போலியாக நடித்து யாரோ டவரை நூதனமாக திருடியுள்ளதை அறிந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் செல்போன் டவர் திருட்டில் முக்கிய குற்றவாளிகளான நாங்குநேரி பகுதியை சேர்ந்த மூவர் பிடிபட்டுள்ளனர். அவர்களோடு தொடர்புடைய செல்போன் டவரை திருட உடந்தையாக இருந்த மேலும் 10 பேரின் அடையாளங்கள் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் வேறு சில பகுதிகளிலும் இதுபோல செல்போன் டவர்கள் மாயமானதாக வழக்கு உள்ள நிலையில் அதில் இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. திருடிய செல்போன் டவரின் ஜெனரேட்டர் மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.