செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 மே 2020 (10:07 IST)

குடித்துவிட்டு கும்மாளம் போட்ட கும்பல்! – தட்டி கேட்டவர் குத்திக் கொலை!

சேலம் அருகே மது அருந்தி விட்டு அதிவேகமாய் சென்றவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த இரு தினங்கள் மட்டும் தமிழகத்தில்  மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மது அருந்தி விட்டு மூன்று பைக்குகளில் வந்த ஆறு இளைஞர்கள் சாலையில் அதிவேகமாக வண்டியை ஓட்டி சென்றிருக்கின்றனர். மீண்டும் மீண்டும் கத்தி கொண்டே அந்த பகுதியில் சுற்றி வரவே, அங்கு வசித்து வரும் விஷ்ணுபிரியன் என்பவர் அவர்களை தடுத்து நிறுத்தி அதிவேகமாக செல்ல வேண்டாம் என கண்டித்துள்ளார்.

இதனால் போதைக்கும்பலுக்கும் , அவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென அவர்கள் விஷ்ணுபிரியனை குத்தியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் சரிந்து விழ அவரது சகோதரர்கள் அசம்பாவிதத்தை கண்டு ஓடி வந்துள்ளனர். அவர்களையும் போதை கும்பல் தாக்கிய நிலையில் பொதுமக்கள் வருவதை கண்டதும் போதை கும்பல் ஓடிவிட்டது. அவர்களை துரத்தி சென்ற மக்கள் அந்த கும்பலில் ஒருவனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட விஷ்ணுபிரியன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட நபரை கொண்டு உடன் இருந்த மற்ற நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். மது போதை ஆசாமிகளால் அப்பாவி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.