1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 8 மே 2024 (13:53 IST)

எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி..! மருத்துவமனையை மூட உத்தரவு..!!

Hospital
எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி நகரைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன்(26). பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக யூடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார். அப்போது சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஹேமச்சந்திரனுக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை தந்ததால் இளைஞர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனிடையே, புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் பருமன் சிகிச்சையின்போது உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை தமிழக மருத்துவத்துறை அமைத்தது. அந்த விசாரணை குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது.


ஹேமச்சந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை. ஒரு மணிநேரமாக ஹேமச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளனர். மேலும், தகுதியான மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்க தாமதமானது தான் இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.