1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:13 IST)

கூட்டமாக பட்டாசு வெடிக்க அனுமதி அவசியம்..! – மாசுகட்டுபாட்டு வாரிய விதிமுறைகள்!

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தீபாவளி அன்று பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் பலரும் புது துணிகள் வாங்குதல், பலகாரங்கள் செய்தல் என உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

தீபாவளி என்றாலே மக்கள் பட்டாசு வாங்கி வெடிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடுகளை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.


அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மொத்தம் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பட்டாசு வெடிக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை மாசுகட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, குறைந்த ஒலி கொண்ட பட்டாசுகள் மற்றும் குறைவான காற்று மாசை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்

திறந்தவெளியில் ஒன்றாக கூடி பட்டாசு வெடிப்பதாக இருந்தால் இதுகுறித்து மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

மருத்துவமனை, கோவில் மற்றும் அமைதி தேவையான பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. குடிசை மற்றும் தீப்பற்றக்கூடிய பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசு மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K