வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (18:51 IST)

ரூ.10 குளிர்பானங்களுக்கு தடையா.? ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Subramaniyan
அதிக அளவு நச்சுகள் இருக்கும் குளிர்பானங்கள் தடை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது 5 வயது மகள் காவியா ஸ்ரீ கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கடையில் பத்து ரூபாய் குளிர்பான பாட்டிலை வாங்கி அருந்தியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி மூக்கு, வாயில் நுரைதள்ளி சிறுமி மயங்கியதாக கூறப்படுகிறது.

உடனே செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டு குளிர்பான மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
பாட்டில்கள் காஞ்சிபுரத்திலிருந்து வாங்கி வரப்பட்டதால், அதிகாரிகள் அங்கும் சோதனை மேற்கொண்டனர். குளிர்பான கம்பெனி கிருஷ்ணகிரி, நாமக்கல்லிலும் இயங்குவதால் அங்கும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பத்து ரூபாய் குளிர்பானங்கள் தமிழக முழுவதும் புற்றீசல் போல் பரவி உள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக குழந்தைகள் அந்த குளிர் பானங்களை விரும்பி அருந்துகின்றனர் என்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பத்து ரூபாய் குளிர்பானங்கள் விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பத்து ரூபாய் குளிர்பான மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆய்வின் முடிவில்  அதிக அளவு நச்சுகள் இருக்கும் குளிர்பானங்கள் தடை செய்யப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.