1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 15 மே 2024 (09:44 IST)

இருவேறு இடங்களில் சாலை விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 9 பேர் பலி..!

Accident
தமிழகத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 9 பேர் பலியான சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூவத்தூரிலிந்து ஒரே காரில் 5 பேர் சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில்  வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த ஒரு மரத்தின் மீது கார் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதை பார்த்த மக்கள் ஓடி வந்து காரிலிருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களை வெளியில் மீட்க முடியவில்லை.
 
இதையடுத்து வெல்டிங் கடை வைத்திருப்பவர்களின் உதவியுடன் காரை வெல்டிங் மிஷன் மூலம் வெட்டி எடுத்து காரில் சிக்கியவர்களை  மீட்டனர். இதில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
 
கவலைக்கிடமான நிலையில் இருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.  இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. 

5 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இறந்தவர்கள் ராஜேஷ் 25, ஏழுமலை 26, விக்கி 25 என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் கூவத்தூரில் கள்ளு குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் காரை ஓட்டி வந்தபோது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் சரவணன்(50),   ஜெய் பினிஷா (40), அவரது மகன்கள் மிக்சால் (20), பைசல் (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.


படுகாயங்களுடன் அத்தல் (16) என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டான். இந்த இரண்டு சாலை விபத்துக்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.