பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக குறைப்பு- திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு..!
தமிழ்நாட்டில், பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, மற்றும் உயர்கல்வி வழிகாட்டி முகாம் போன்ற முக்கிய விவரங்களை உள்ளடக்கிய கல்வியாண்டு நாட்காட்டி ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.
அதன்படி, தற்போதைய கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை கடந்த ஜூன் 8-ந்தேதி வெளியிட்டது. அதில், பள்ளிகள் 220 வேலை நாட்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், ஆசிரியர் சங்கங்கள் வேலை நாள்களின் எண்ணிக்கையை குறைத்து பணிச்சுமையை குறைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தன. இதனை பரிசீலித்து, பள்ளிக்கல்வித்துறை, வேலை நாட்களின் எண்ணிக்கையை 210 நாட்களாக குறைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியில், 19 சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருந்ததை மாற்றி, 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் முடிந்துவிட்டன.
பழைய நாட்காட்டியில், பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 25-ந்தேதி வரை இருந்த நிலையில், புதிய திருத்தத்தின் மூலம், வேலை நாட்கள் ஏப்ரல் 30-ந்தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளிகளுக்கு 210 வேலை நாட்கள் குறையாமல் இருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Edited by Siva