1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:54 IST)

24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும்.! தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் கெடு.!

தனக்கு எதிராக போடப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் 24 மணி நேரத்தில் பதில் சொல்லவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  
 
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்த போது சங்கத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. மேலும் இந்த விஷயத்தினை சரி செய்யும் பொருட்டு, ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைபடி பொதுக்குழுவில் ஏகமனதாக நடிகர் விஷாலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதன் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. 
 
இந்நிலையில்,  தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமீபத்தில் என் பெயரை குறிப்பிட்டு, என் மீது பல அவதூறுகளை சுமத்தி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி ஒன்று கண்டேன்.
 
அதில் காணும் Special Auditor அவர்களின் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுநாள் வரை சங்கம் சார்பாக என்னிடம் முறையாக எவ்வித விளக்கமும் கேட்கப்படாத நிலையில், தங்களின் இப்படி ஒரு பொய்யான பத்திரிக்கை செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த 2017-2019 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றேன்.
 
நான் சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, சங்க சட்டவிதிகளின் அடிப்படையில், அதில் செயலாளராக இருந்த கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் தீர்மானங்களின்படி, ஆயுட்கால காப்பீடு திட்டம், ஓய்வூதியத் திட்டம், கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் தீபாவளி பரிசு ஆகிய பல்வேறு சிறப்பான உதவித் திட்டங்களை நிர்வாக உறுப்பினர்களின் ஆலோசனைப்படியும், செயற்குழு ஒப்புதல் பெற்ற தீர்மானத்தின்படியும் நாங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தியுள்ளோம்.

எந்தவித தவறும் செய்யாத பட்சத்தில் தாங்கள் என் மீது தீர்மானம் நிறைவேற்றியதாக பத்திரிகை செய்தி ஏற்புடையதல்ல என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்.  மேற்காணும் நலத்திட்ட உதவிகள் முழுமையாக உறுப்பினர்கள் பயனடைவதற்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் முறைகேடு உள்ளதாக சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அது தொடர்பாக விளக்கவும், தெளிவுபடுத்தவும் கடந்த கால நிர்வாகத்திற்கு முறையான சந்தர்ப்பம் அளிக்காமல், தாங்கள் நேரடி முடிவெடுத்து ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்பணர்ச்சியின் வெளிப்பாடாகவே அறியப்படுகிறது.
 
எனது தலைமையிலான சங்க நிர்வாகம் செயல்படுத்திய திட்டத்தின் வாயிலாக தற்போதைய நிர்வாகத்தினர் உட்பட அணைத்து சங்க உறுப்பினர்களும் அச்செயல் திட்டத்தின் மூலம் நற்பலன் பெற்றதும் தாங்கள் அறிந்ததே. சங்க வளர்ச்சிக்காகவும், சங்கத்தின் உறுப்பினர்களின் நலனுக்காகவும் கொடுக்கப்பட்ட தொகையை முறைகேடானது என்ற குற்றச்சாட்டினை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ளது. 
 
சங்கத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சங்கத்திற்கு வருவாய் ஈட்டுவதற்காக சங்க பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஒப்புதல் அளித்து "இளையராஜா 75" என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தி சங்கத்திற்கு பாராட்டுதலும் பெற்று இருக்கிறோம். கடந்த 2017-2019 ஆண்டுகளுக்கான ஆவண சான்றுகள் அனைத்தும் சங்க நிர்வாகம் வசம் உள்ள நிலையில், என் தரப்பு சாட்சிகளை கொண்டு ஒரு நியாயமான விசாரணை நடந்தால், என் மீது பத்திரிகை மூலமாக தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்பது நிரூபணமாகும்.
 
உண்மையில் காழ்ப்புணர்ச்சியும், சுய உள் நோக்கங்களும் இன்றி, சங்க நலனே தங்கள் நோக்கமெனில், நியாயமான என் கருத்து ஏற்கப்படும் என எதிர்பார்க்கிறேன். இத்துடன் என் மனதில் இருக்கும் கேள்விகளையும் முன்வைத்து விடுகிறேன். என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏன் தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்தாலோசிக்க வேண்டும்? இவை விஷால் என்ற நடிகருக்கு தயாரிப்பாளர் சங்கம் விதிக்கும் மறைமுக 'ரெட் கார்ட்" -ஆ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் கடந்த காலங்களில் நடிகர்கள் மீது ரெட் கார்ட் நேரடியாகவோ, மறைமுகமாகவோ போடப்பட்ட போது, சட்டத்தின் முன் கை கட்டி நின்று தங்கள் முடிவை அன்றைய சங்க நிர்வாகிகள் வாபஸ் பெற்ற வரலாறு உள்ளது என்பதை மறவமால் இருப்பது, நல்லது. 


என் மீது தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள், இக்கடிதம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் தாங்கள் வன்மத்தினால் அனுப்பிய பத்திரிக்கை செய்தியை திரும்ப பெற்று பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக நான் இந்த விவகாரத்தை எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.