திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (10:47 IST)

திமுகவுடன் நட்பு பாராட்டும் அதிமுக – என்ன நடக்கிறது சட்டசபையில்?

சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவரையில்லாத அளவுக்கு சுமூகமாகவும், எந்த வித கட்சி பூசல்களும் இல்லாமல் நடப்பது ஆச்சர்யமளிக்கிறது. முக்கியமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணக்கமாக பேசுவதும், ஸ்டாலின் தரப்பு அதிமுகவுக்கு புகழாரம் சூட்டுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மிகப்பெரும் இரு கட்சிகள் அதிமுக மற்றும் திமுக. கலைஞர் காலத்தில் திமுகவிலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் எப்போது அதிமுகவை தொடங்கினாரோ அப்போதிலிருந்தே இரண்டு கட்சிகளும் எலியும், பூனையுமாகவே இருந்து வருகின்றன. அவ்வபோது இரண்டு கட்சி எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கட்சி தாவும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

தற்போது ஆளும் அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்கட்சி திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும். நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, தண்ணீர் பிரச்சினையின் போது என பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளது.

நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சினைகள் ஓய்ந்து இரு கட்சிகளும் நட்பு பாராட்டி வருவதாக தெரிகிறது. இரண்டு நாட்கள் முன்பு விவாத நேரத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் “எடப்பாடி பழனிசாமி அவரது துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அடேங்கப்பா… அவர் பேசுவதை கேட்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன்” என்று கூறினார். இதனால் சட்டசபையே கொஞ்ச நேரம் சிரிப்பு சபையானது.

அதேபோல கடந்த நாட்களில் சேலம் உருக்காலை சம்பந்தமான முடிவில் திமுக எம்.பிக்களோடு சேர்ந்து பிரதமரை சந்திப்பதாக முதல்வர் பழனிச்சாமி கூறியிருக்கிறார். பால் விலை உயர்வு குறித்து முடிவு எடுப்பது பற்றி பேசிய எடப்பாடியார் “எதிர்கட்சிகளுக்கு பால் விலை உயர்வை அமல்ப்படுத்துவதில் பிரச்சினை இல்லையென்றால் அதை பற்றி யோசிக்கலாம்” என கூறியிருக்கிறார்.

தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியிடம் மாற்றங்கள் தெரிவதாக அதிமுகவினரே பேசிக்கொள்கிறார்களாம். அனைத்து கட்சியினரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து பேசுவது, அவர்களிடமிருக்கும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது என அப்டேட் ஆக இருக்கிறாராம். ஸ்டாலினும் எடப்பாடி மீதான தாக்குதல் பேச்சை சமீபமாக குறைத்து கொண்டு வருகிறார். சட்டசபையில் தேவையான விஷயங்களை கோரிக்கையாக முன் வைக்கிறார். அதற்கான தக்க தீர்வுகளை பற்றியும் ஆலோசிக்கிறார்.

இந்த இருவரின் இந்த திடீர் அமைதியும், ஒருங்கிணைப்பும் “புயலுக்கு முன் அமைதி” என்பது போல அரசியல் கட்சியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.