பல்வேறு பிரச்சனைகள் : திசை திருப்பவே நக்கீரன் கைதா?
பிரபல வார இதழ் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், அவரை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதூறாக எழுதினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால், அவரை கைது செய்திருப்பது சர்வாதிகார போக்கையே காட்டுகிறது என பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் அரங்கேறி வரும் பல்வேறு பிரச்சனைகள் உதாரணமாக, சிலை கடத்தல், குட்கா ஊழல், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம், துணைவேந்தர் நியமன லஞ்ச ஊழல் இவற்றை மறைக்கவே கைது பிரச்சனை மூலம் திசை திருப்பப்படுகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது எனவும். தற்போது நக்கீரன் கைதால், மற்ற பிரச்சனை மழுங்கடிக்கும் செயல் நடக்கிறது எனவும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து பேச எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே ஆளுநரிடம் நேரம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.