மிரட்டப்பட்டாரா ‘யார் நீங்க’ சந்தோஷ்? - அந்தர் பல்டி அடித்தது ஏன்?

Last Modified வெள்ளி, 1 ஜூன் 2018 (11:16 IST)
ஆறுதல் கூற வந்த ரஜினியிடம் ‘யார் நீங்க?’ என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பை எழுப்பிய சந்தோஷ்ராஜ், இன்று நான் கூறியதை ஊடகங்கள் திரித்துவிட்டன என அந்தர் பல்டி அடித்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடிக்கு சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று சந்தோஷ் என்ற வாலிபர் கேள்வி கேட்டார். மேலும், சென்னையிலிருந்து இங்கே வர உங்களுக்கு 100 நாட்கள் ஆனதா? எனக்கேட்டு ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்தார்.
 
இந்த வாலிபரை நெட்டிசன்கள் கொண்டாடினார். நான்தான்பா ரஜினிகாந்த் என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் பிடித்தது. இவர்தான் உண்மையான, வீரமான தமிழர்கள் என்று போற்றினார். ஒருசில மீடியாக்கள் இவர் கேட்ட கேள்வியை வைத்து ரஜினியை டோட்டலாக டேமேஜ் செய்தன.
 
இந்த நிலையில் இதுபற்றி ஒரு விளக்க வீடியோவை சந்தோஷ் வெளியிட்டுள்ளார். அதில்  “ரஜினிகாந்த் அவர்களை பார்த்து 'யார் நீங்க' என்று நான் கேட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நான் சொல்ல வந்த நோக்கம் வேறு, ஆனால் மீடியாக்காரர்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் அதை வேற மாதிரி கொண்டு செல்கின்றனர்.
 
ரஜினிகாந்த் பதவியில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதர். அவர் கடந்த 100 நாட்களில் ஒருநாள் வந்திருந்தால் எங்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் உலக அளவில் சென்றிருக்கும் என்ற ஆதங்கத்தில்தான் அவரை அவ்வாறு கேட்டேன். ஆனால் மீடியாக்காரர்கள் தங்களுடைய விளம்பரத்திற்காக வேறு மாதிரி கொண்டு செல்கின்றனர். இது என்னை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது' என்று கூறியுள்ளார்.
 
இவர் ரஜினியை  ‘யார் நீங்க?’ என்ற கேள்வி எழுப்பிய விவகாரம் பரபரப்பானவுடன், பிரபல வார இதழ் இவரிடம் பேட்டி எடுத்தது. அதிலும், அவர் ரஜினிக்கு எதிரான கருத்துக்களை காட்டமாகவே தெரிவித்திருந்தார். அவரின் காலா படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்காகத்தான் அவர் இங்கு வந்துள்ளார். அதுவும் ஸ்டெர்லைட் மூடப்பட்டவுடன் வந்துள்ளார். ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாமல் இருந்திருந்தால் வந்திருக்க மட்டார். எங்களை சமூக விரோதிகள் என அவர் விமர்சித்துள்ளார். 100 நாட்கள் நாங்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு நாளேனும் அவர் கலந்து கொண்டிருந்தால் இதுபற்றி பேச அவருக்கு தகுதி உண்டு. எனவே, எங்களைப் பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை” என சந்தோஷ் காட்டமாக பேட்டி கொடுத்திருந்தார்.

 
இந்நிலையில், திடீரென ரஜினியை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு சென்று ஒரு வீடியோவில் விளக்கம் அளித்திருப்பதை பார்க்கும் போது, அவர் மிரட்டப்பட்டிருக்கலாம் அல்லது மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட நிர்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :