கருணாஸ் விவகாரத்தில் என்ன நடக்கிறது? - ஒரு அலசல்
கருணாஸ் எம்.எல்.ஏவை கைது செய்ததன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரி குறித்து கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு அவர் வருத்தமும் தெரிவித்தார். ஆனால், கருணாஸ் மீது 9 வழக்குகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஆனால், கருனாஸை விட தமிழக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் கைது இதுவரை செய்யப்படவில்லை. கருணாஸை கைது செய்ததன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.
அந்த விழாவில் பேசிய கருணாஸ், கூவத்தூர் விவகாரம் குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். எந்த எம்.எல்.ஏவும் தப்பி ஓடிவிடக்கூடாது என்பதால் அந்த இடத்தை தேர்வு செய்ததே நான்தான். அங்கு நடந்தவை அனைத்தும் எனக்கு தெரியும். முதல்வரை தேர்வு செய்ததே நாங்கள்தான் என அவர் பேசியது முதல்வர் எடப்பாடி தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்ததாம்.
சசிகலா தரப்பிற்கு நெருக்கமாக இருந்த கருணாஸ், கூவத்தூர் விடுதியில் முக்கிய பங்காற்றினார். அங்கு என்ன பேரங்கள் நடந்தது? தற்போது அமைச்சர்களாக உள்ள பலர் என்ன செய்தனர்? எதனால் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தேர்வு செய்தார் என அனைத்து ரகசியங்களும் கருணாஸுக்கு தெரியும். அதனால்தான், அன்று மேடையில் ‘நான் வாயை திறந்தால் ஒருவர் கூட அமைச்சராக இருக்க முடியாது’ என தைரியமாக பேசினார். அதுதான், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கருணாஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழக அரசு தன்னை கைது செய்ததால், கடுமையான கோபத்தில் இருக்கும் கருணாஸ், ஜாமீன் கிடைத்து வெளியே வந்த பின் கூவத்தூர் ரகசியங்கள் குறித்து செய்தியாளர்கள் முன்னிலையில் பேட்டி கொடுக்க திட்டமிட்டிருந்தாராம்.
எனவே, அவரிடம் தமிழக அரசு தரப்பில் சில பேரங்களை பேசவே காவல்துறை மூலம் அவரை விசாரிக்க 7 நாள் காவல் கேட்கப்பட்டதாம். அதாவது, அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கூல் செய்து, அமைதியாக்கி விட திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.
ஆனால், கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறிய நீதிமன்றம், காவல் துறையின் கோரிக்கை மனுவை நிராகரித்து விட்டது. இதனால், என்ன செய்வதென்று புரியாமல் அடுத்த கட்ட ஆலோசனையில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.