யார் தலைமையில் தேர்தல்? இபிஎஸ், ஓபிஎஸ் விவகாரம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக யார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள போகிறது என்பது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக யாரை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது என்பதில் பூசல்கள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
எம்.எல்.ஏக்க சேர்ந்து முதல்வரை தேர்ந்தெடுப்போம் என செல்லூரார் சொல்ல, ஒரே முதல்வர் எடப்பாடியார்தான் என ராஜேந்திரபாலாஜி சொல்ல அமைச்சர்கள் ஆளுக்கொரு எண்ணத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடியாரை முன்னிறுத்துவது ஓபிஎஸ் அணியினரை அப்செட் ஆக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “இந்த ஆட்சி நிலைக்காது என பலர் சொன்ன நிலையில் இதை கட்டி காத்து மக்களுக்கு நல்லாட்சியை அதிமுக வழங்கியுள்ளது. அம்மா ஜெயலலிதா இறந்தபிறகு இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றை எடப்பாடியார் தலைமையில், ஒபிஎஸ் அவர்களின் ஆலோசனையோடு ஒற்றுமையாக எதிர்கொண்டோம். அதிமுகவின் வெற்றியே மக்கள் மனதில் அதிமுக உள்ளதற்கு சான்று. எதிர்வரும் தேர்தல்களிலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வெற்றியை பெறுவோம்” என கூறியுள்ளார்.