வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (09:56 IST)

ஆசை 60 நாள், மோகம் 30 நாள்! – காதல் மனைவியை எரித்து கொன்ற கணவன்!

விழுப்புரத்தில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை இரண்டே மாதத்தில் தீ வைத்து கணவனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் நைனார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது 18 வயது மகள் ராஜேஸ்வரி திருசிற்றம்பலத்தில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். ராஜேஸ்வரிக்கு அதே நர்சிங் கல்லூரியில் படித்து வந்த துளசிங்கம் என்ற மாணவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் இது காதலாக மாற இருவரும் அடிக்கடி நேரில் சந்திப்பதும், செல்போனில் பேசுவதுமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இரு வீட்டிற்கும் தெரிய வர அவர்கள் காதலை ஏற்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணமும் செய்து வைத்துள்ளனர். இரண்டு மாதங்களாக காதலுடன் சந்தோஷமாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென பிரச்சினைகள் எழுந்துள்ளன. துளசிங்கம் அடிக்கடி ராஜேஸ்வரியை தனது பெற்றோரிடம் வரதட்சனை வாங்கி வரும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த துளசிங்கம் தன் காதல் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து துளசிங்கத்தை கைது செய்துள்ள போலீஸார் வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை அவர்மீது பதிவு செய்துள்ளனர்.

”ஆசை 60 நாள் மோகம் 30 நாள்” என்ற பெரியோரின் பழமொழிக்கேற்றாற்போல் திருமணமாகி 60 நாட்களுக்குள்ளாகவே காதலனே தனது காதல் மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.