ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:01 IST)

தமிழன் என்று சொல்லடா... தலை குனிந்து நில்லடா - ராமதாஸ் காட்டம்!

உணவகங்களில் அனைவரும் தமிழை மறந்து ஆங்கிலத்தில் பேசுவது கவலை அளிப்பதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 
உணவகங்களுக்குச் சென்றால் அங்கு எவரும் சோறு என்று கேட்பதில்லை, ரைஸ் என்று தான் கேட்க வேண்டுமாம். ரைஸ் என்பதன் தமிழ் சொல் அரிசி ஆகும். ஆனாலும், அதை உணராமல் சோறு என்பதை ரைஸ் என்ற ஆங்கில வார்த்தை மூலமாகவே கேட்கின்றனர். உணவகங்கள் அனைத்தும் ரெஸ்டாரண்டுகளாக மாறிவிட்டன.
 
குழம்பு என்பது நல்ல தமிழ்ச் சொல். ஆனால், நமது மக்கள் உணவகத்துக்கு சென்று விட்டால் ரைசுடன் கறி கொடுங்கள் என்கிறார்கள். கறி என்றால் இறைச்சி அல்ல. குழம்பாம். அப்படி என்றால் கறிக்குழம்பை, அதாவது இறைச்சிக் குழம்பை எவ்வாறு அழைப்பார்கள்? அதற்கு கிரேவி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 
ஆங்கிலத்தில் கிரேவி என்றால் இறைச்சியை வேகவைத்து வடிக்கும் போது கிடைக்கும் நீர் என்பது பொருள். இறைச்சிக் குழம்பை கிரேவி என்று சொல்வதில் பொருள் உள்ளது. இது காய்கறி மசாலா குழம்புக்கு எந்த வகையிலும் பொருந்தாது. ஆனால், நமது ஆட்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் காய்கறி மசாலா குழம்புக்கு வெஜ்-கிரேவி என்று பெயர் வைத்து விட்டனர்.
 
உணவுகளில் தமிழ்க் கொலை இத்துடன் நிறைவடைந்து விடவில்லை. நெல் என்ற சொல் ‘பாடி’ ஆகிவிட்டது. வயல் ஃபீல்டு ஆகி விட்டது. கோழி சிக்கனாகவும், ஆட்டிறைச்சி மட்டனாகவும் மாறி விட்டன. உணவு விடுதிகளில் மீன் என்றால் பெரும்பான்மையினருக்கு தெரியாது. ஃபிஷ் என்றால் தான் தெரியுமாம்.
 
ஆனால், நாம் இருப்பது தமிழ்நாடாம்; நாமெல்லாம் தமிழர்களாம். என்ன கொடுமை இது?  அதனால் தான் சொல்கிறேன். தமிழன் என்று சொல்லடா... தலை குனிந்து நில்லடா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.