செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (09:00 IST)

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடியார்! – ராமதாஸ் ட்வீட்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்திய பாமகவின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. பல்வேறு கட்சிகளும், விவசாயம் சார்ந்த இயக்கங்களும் இதை வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படாது என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் முதல்வருக்கு நன்றிகள் தெரிவித்து வருகின்றன. முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ”காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பா.ம.க.வின் 10 அம்சக் கோரிக்கைகளில் முதன்மையானதை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றியும், பாராட்டுகளும்!” என்று கூறியுள்ளார்.