1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (15:07 IST)

தைப்பூசம் கோலாகலம்: அறுபடை வீடுகளுக்கு படையெடுத்த மக்கள்!

இன்று தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளிலும், மற்ற முருகன் கோவில்களிலும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் ஒன்றாக வரும் நாள் தைப்பூசமாக தமிழக மக்களால் வெகுவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால் தைப்பூச நாளில் முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. மக்கள் பலர் விரதமிருந்து காவடி, பால்குடம் போன்றவைகளை சுமந்து முருகனை வழிப்பட்டனர். பழனியில் மட்டுமல்லாது அனைத்து முருகன் கோவில்களிலுமே இன்று பரவலான கூட்டம் காணப்படுகிறது. இன்று மாலை முருகன் கோவில் திருத்தேரோட்டம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் பழனிக்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

மேலும் இதே நாளில் பல இந்து கடவுள்களுக்கும் விசேஷமான நாள் என்பதால் தை உற்சவ திருவிழா, லட்சத் தீப விழா என பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.