ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2017 (17:34 IST)

டெங்கு கொசுக்களைக் கூட ஒழிக்காத பழனிச்சாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா?- ராமதாஸ் கேள்வி

டெங்கு கொசுக்களைக் கூட ஒழிக்காத பழனிச்சாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது நகைச்சுவையானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



 



தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு இசட் பிளஸ் எனப்படும் கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எடப்பாடிக்கு இசட் பிளஸ் காவல் தேவை என்பது நல்ல நகைச்சுவை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.

இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது சசிகலாவின் ஆதரவுடன் விலை கொடுத்து வாங்குவதற்கு முதல்வர் பதவி அல்ல. அது இந்தியாவில் பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் இராஜிவ் குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் சிறப்புப் பாதுகாப்பு படை(SPG) காவலுக்கு அடுத்தபடியாக தேசியப் பாதுகாப்புப் படையினரைக்(NSG) கொண்டு வழங்கப்படும் இந்தியாவின் இரண்டாம் நிலைப் பாதுகாப்பு ஆகும். இந்தியாவில் இன்றைய நிலையில் மத்திய அமைச்சர்கள் இராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 17 பேருக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல் அளவிட முடியாது. ஆனாலும் கூட இவர்களில் பலருக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்று வரும் தலைவர்களுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை ஒப்பிடவே முடியாது. இன்னும் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. தேசப்பாதுகாப்பு, மாநிலப் பாதுகாப்பு சார்ந்த ஏதேனும் அதிராடியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. உதாரணமாக ஆந்திரத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க சந்திரபாபு நாயுடு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், அவரை திருப்பதி மலைப்பாதையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி படுகொலை செய்ய முயற்சி நடந்தது. அத்தாக்குதலில் கடுமையான காயங்களுடன் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார். அதனால் அவருக்கு உயர்நிலை இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்றார். ஆனால், டெங்கு கொசுக்களைக் கூட ஒழிக்காத பழனிச்சாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினால் குழந்தைகள் கூட சிரிக்கும்.

சசிகலா மற்றும் தினகரன் ஆதரவுடன் தமிழக முதலமைச்சர் பதவியை ஏலத்தில் எடுத்து அமர்ந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தம்மை ஓர் ஆண் ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு அவரைப் போலவே செயல்பட்டு வருகிறார். இசட் பிளஸ் பாதுகாப்பு அணியில் 36 முதல் 55 பேர் வரை இருப்பர். இவர்களில் குறைந்தது 10 பேர் கமாண்டோக்களாக இருப்பார்கள். இத்தகைய பாதுகாப்புப் படைக்காக ஆண்டுக்கு ரூ.6 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக செலவாகும். இவ்வளவு செலவு செய்து பாதுகாப்பு அளிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த தியாகத்தையும் செய்துவிடவில்லை.... ஊழல் மட்டும் தான் செய்து வருகிறார். அவருக்கு கறுப்புப்பூனைப்படை பாதுகாப்பு வழங்குவது அப்படைக்கு செய்யும் அவமரியாதை ஆகும். எனவே, பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் காவல் கோரப்பட்டால் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.