1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (11:40 IST)

38 வருஷமா இதையே சொல்லி சமாளிக்கிறாங்க! – மதுக்கடை திறப்பிற்கு ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மதுக்கடைகளை மூட கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் போலி மது, கள்ள மது உற்பத்தி, விற்பனை இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. அது சாத்தியமானதே. அதை விடுத்து கள்ள மது பாதிப்பை தடுக்க மதுக்கடைகளை திறந்திருப்பதாக முதல்வர் கூறுவது அரசின் தோல்வியையே காட்டுகிறது!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் “மதுவிலக்கு கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மதுவிற்பனைக்கான பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தப்படுகிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.” என்று கூறியுள்ள அவர், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.