வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (20:46 IST)

ஆண்டுக்கு ஒருமுறை வரி உயர்வா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Ramadoss
ஆண்டுக்கு ஒருமுறை வரி உயர்வா? என பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புறங்களிலும் சொத்து வரியை ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்த வகை செய்யும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகிறது.  சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது!
 
சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் அண்மையில் தான் 200%  வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதையே செலுத்த முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு இத்தகைய சுமையை தமிழ்நாட்டு மக்களால் சுமத்த முடியாது!
 
2017-18 ஆம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்ட போது அதைக் கண்டித்து இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே தலைமையேற்று போராட்டம் நடத்தினார். அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கும் போது  ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்துவது என்ன நியாயம்?
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரை (வாக்குறுதி 487) சொத்துவரி உயர்த்தப்படாது என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. பொருளாதார நிலையை காரணம் காட்டி மக்களுக்கான உரிமைகளை மறுக்கும்  அரசு வரியை மட்டும் உயர்த்துவது சரியா?
 
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் மீது மேலும், மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது.  அதனால், ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு  கைவிட வேண்டும்!