செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (15:02 IST)

கலை, அறிவியல் பாடங்களுக்கு நுழைவு தேர்வா? – ராமதாஸ் கண்டனம்!

கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவு தேர்வுக்கு ஹரியானா மத்திய பல்கலைகழகம் பரிந்துரை செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தற்போது வரை மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட முக்கியமான சில படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என ஹரியானா மத்திய பல்கலைகழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.

குஹாத் குழுவின் பரிந்துரைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராமதாஸ் “கொரோனா பாதிப்பு சூழலில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குஹாத் குழு, பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது அதிகார வரம்பு மீறிய செயலாகும். இது கண்டிக்கத்தக்கது!” என்று கூறியுள்ளார்.

மேலும் “கொரோனா பாதிப்பால் பல மாநிலங்களிலும், சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளிலும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் வாடும் நிலையில் எந்த நுழைவுத்தேர்வும் தேவையில்லை; நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும்!” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.