திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (11:01 IST)

ஊரடங்கு கேப்புல இப்படி ஒரு திட்டமா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள நீர்வளத்துறை திருத்த விதிகளுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நீர்வள மேலாண்மை பணிகளுக்காக நீர்வளத்துறை திருத்த விதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில் “மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களை மத்திய அரசு நுணுக்கமாகத் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. அதில் ஒன்றுதான், தற்போது காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் பறிக்கும் விதமாக இந்திய நீர்வளத்துறை திருத்த விதிகள் என்ற பெயரில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நதிநீர் கட்டுப்பாட்டு விதிகளாகும், முப்பதாண்டு காலம் தமிழகம் போராடியதன் விளைவாகக் கிடைத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்னும் உரிமையை, ஒரே ஒரு திருத்தத்தின் மூலம் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் நீர்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் கொண்டு செல்ல முனைந்துள்ளது ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடுஞ்செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் குஜராத் மாநில நீர்மேலாண்மை வாரியத்தை இந்த திருத்தத்தில் கொண்டு வராததாக குற்றம் சாட்டிய சீமான், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு சட்டமும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டமுமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.