சோபியா விவகாரம்: கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு
கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய தமிழிசை-சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை எனலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் வரை இந்த விஷயம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பாஜக மற்றும் அதிமுக தலைவர்களை தவிர அனைவரும் சோபியாவுக்கே தங்கள் ஆதரவை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விஷயம் குறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார். விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினி இதுகுறித்து தனது கருத்தை தெரிவிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்
இந்த நிலையில் 'தலைவர் 165' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இன்று ரஜினிகாந்த் உத்தரபிரதேசம் செல்கின்றார். அதற்காக இன்று விமான நிலையம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் சோபியா விவகாரம் குறித்து கேள்வி கேட்டனர். சோபியா விவகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று ரஜினி கூறினார். அதேபோல் தமிழகத்தில் குட்கா விவகாரத்திற்காக நடைபெற்று வரும் சிபிஐ ரெய்டு குறித்தும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது