ரஜினியை பார்க்க வேண்டுமா ? போட்டோ எடுக்க வேண்டுமா ? – 50 லட்சம் ஏமாற்றிய நபர் !
நடிகர் ரஜினிகாந்தைப் பார்க்கவைப்பதாக ஆசைவார்த்தைக் கூறி அவரது ரசிகர்களிடம் 50 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்துள்ள நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் ரஜினி பாபு என்பவர். இவர் தன்னை ரஜினிக்கு பாடிகார்டு என்றும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி எனவும் தன்னை அப்பகுதியில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் ஆப் க்ரூப் ஒன்றை ஆரம்பித்த அவர் அதில் பல ரஜினி ரசிகர்களை இணைத்துள்ளார்.
இதையடுத்து ரஜினியை சந்திக்க வைக்கவும் அவரோடு புகைப்படம் எடுக்க வைக்கவும் தன்னால் முடியும் எனக் கூறி பலரிடம் பணம் பெற்று வந்துள்ளார். நதிநீர் இணைப்புக்கு ஆதரவாக நடைப்பயணமாக ரஜினி வர சொன்னதாக சேலத்தில் இருந்து சென்னைக்கு தமிழ்ச்செல்வி என்ற பெண் உட்பட ஏழுபேரை அழைத்து வந்துள்ளார். அப்போது தமிழ்ச்செல்வியிடம் ஒன்றரை லட்சம் பணம் பெற்றுள்ளார்.
இதுபோல ரசிகர்களின் இல்லத் திருமண விழாவுக்கு ரஜினியை வரவைப்பதாகவும், ரஜினியுடன் புகைப்படம் எடுக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுபோல பலரிடம் இதுவரை ரூ 50 லட்சம் வரை ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மேல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர் சில மாதங்களுக்கு முன் சீமான் கட்சிக்காரர்களால் தாக்கப்பட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.